Friday, December 4, 2020

"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான்.


“எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்”


🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும் சீர்குலைக்காதவாறு உறுதியாக இருப்பேன்.


🔮நான் சந்திக்கும் ஒவ்வொரு  நபரிடமும்  மகிழ்ச்சி, செழிப்பு, உடல்நலம் பற்றி பேசுவேன்.


🔮 நான் சந்திக்கும் ஒவ்வொரு  நபரிடமும்  அவர்களுக்குள்  இருக்கும் சக்தியை உணரச் செய்வேன்.


🔮ஒவ்வொரு விஷயத்திலும் இருக்கும் நல்லவற்றை மட்டும் பார்த்து எனது நம்பிக்கையை மெருகேற்றி கொள்வேன்.


🔮சிறந்ததை மட்டுமே எண்ணுவேன், சிறந்ததை மட்டுமே 

செய்வேன்,சிறந்ததை மட்டுமே எதிர்பார்ப்பேன்.


🔮 மற்றவர்களின் சந்தோசத்தை எனது சந்தோசமாக  எண்ணி பூரிப்படைவேன் .


🔮கடந்த கால தவறுகளை மறந்து, எதிர்காலத்தில் நான் அடையப் போகும் பெருமைகளை எண்ணி வீறுநடை போடுவேன்.


🔮 நான் எப்போதும் மகிழ்ச்சியை மட்டுமே எண்ணுவேன்                        மற்றும்   நான் சந்திக்கும் ஒவ்வோர் உயிரிடமும் புன்சிரிப்பை காட்டுவேன்.


🔮 பிறரை குறை சொல்ல நேரமே இல்லாத வகையில் என்னை

மெருகேற்றி உயர்த்தி கொள்ள பெரும் நேரம்  செலவிடுவேன்.


🔮 சோகத்தில் அமைதியாகவும், கோவத்தில் தன்மையாகவும், பயத்தில் உறுதியாகவும்,  தொல்லைகள் வரும் பொழுதும் மனம் முழுதும் மகிழ்ச்சியை பரவிட செய்வேன்.


🔮 என்னுடைய  நலனில் முழு கவனம் செலுத்தி அதை சொல்லால்அல்லாமல் செயலால் இந்த உலகிற்கு பேரறிவிப்பு  செய்திடுவேன்.


🔮என்னுடைய மனசாட்சியின் பால் நேர்மையாக இருப்பேன்,இதனால் இந்த பிரபஞ்சமே எனக்கு துணையாய்  நிற்கும் .


                                                                                     ஆக்கம் - கிறிஸ்டின் டி  லார்சன் 

                                                                                      தமிழில் - முத்தழகன் இ 

(இந்த கட்டளைகளை தினந்தினம் காலை பிரகடனம் செய்யுங்கள். மேலும் அறிந்து கொள்ள ரோண்டா ப்யர்னே எழுதிய "ரகசியம்" புத்தகத்தை வாசிக்கவும்  )


❣️❣️❣️

“அன்பை பெற வேண்டுமா...

உங்களை அன்பால் மூழ்கடித்து கொள்ளுங்கள்,

 நீங்கள் ஒரு காந்தமாக மாறும் வரை”

❣️❣️❣️

Saturday, October 17, 2020

"வெற்றியின் மந்திரம்"


வாழ்க்கைக்கான
 அர்த்தம் தேடிடும்,
 அற்புத பயணத்தில்,
 இன்று ஓர்
 புதிய அத்தியாயம்
 எழுத தொடங்கு,
 
நேற்றும் இன்றும்
வேறல்ல.
அதே வானம்,
அதே விண்மீன்.
பயணம் ஒன்றுதான்,
இலக்கு ஒன்றுதான்,
திசை ஒன்றுதான்,
ஆனால், பாதைகள் வெவ்வேறு.
செல்லும் வழியில்,
சுழல்,சூழல் கண்டறி.
நம்பிக்கையோடு நடைபோடு.
நடக்கும் தூரம்
நமக்குப் பாடம்.

புத்தகத்தின் பக்கங்கள் 
தாண்டி, இந்த உலகம்
மிக பெரிது. 
தீயென விடு.
நல்லன நாடு,
புதியன கல்.
விரும்பியன செய்.
காலம் உனக்கு 
சகலமும் போதிக்கும்.

உந்துதல் இல்லா
முன்னேற்றம் உண்டோ.
போதனைகள் யாவும்
போதாது இவ்வுலகில்,
களம் கண்டு போராடு
வெற்றியோ தோல்வியோ
வீரமுடன் போராடு.
வென்றால் மகிழ்வோம்
வீழ்ந்தால் எழுவோம்.

நீரின் ஓட்டத்தில்
திரும்பி விடாதே,
உனக்கான திசையில்
எதிர்நீச்சல் போட்டிடு.
தண்ணீரில் கண்ணீரை
கரைத்து விடு,
கரை தொடும் நேரம்
வெற்றி உன் கால் தொடும்.

கண்ணீர் துளிகள்
வழிந்திடும் கன்னத்தில்
வியர்வை துளிகள் 
வழிகிறதா...
நீ வெற்றிக்கான 
பாதையில் பயணிக்க 
தொடங்கி விட்டாய் 
என அர்த்தம் கொள்.


வாழ்த்துக்களுடன்,
இ. முத்தழகன்

Sunday, July 5, 2020

"தமிழும் துளிரும்"

நன்சொல் உரைப்பினும்
நன்முறை காட்டினும்
நானிலத்தில் யாவர்க்கும்
கேட்டிட நேரமில்லை,
சொல்லும் அருகதை
உணக்குண்டோ வென
வினவிடவே முன்னிற்க
எரியும் நெருப்பது
தொட்டால் சுடுமென
சொல்லியும் கேளா
தொட்டுப் பார்த்தபின்
சுட்டதென துடிப்பதென்
மானுட அறிவோ?

நாகரிக வளர்ச்சியில்
தான் நம்மை நாமே
தொலைப்பதென்ன?
தொண்குடி பிறந்திட்டும்
தொக்கிட்டு நிற்பதென்ன?

சேர சோழ பாண்டியரும்
சேரவிங்கு அரசாண்டு,
தன்மக்கள் தான்சிறக்க
தணியாத தாகத்தில்
போர்க்களம் புகுந்து
எதிர்ப்படும் எதிரியை
வெட்டி வீழ்த்திட,
வீரம் சொரிந்துடும் 
ஒவ்வொரு அணுக்களும்
வீணாய் போனதென்ன?

வாணிபம் செய்திட
வந்திறங்கிய அண்ணியரை
வாசலோடு அனுப்பிடாது,
உபசரிக்கும் தன் குணத்தை
உபரியாக காட்டிட,
உப்பிட்ட வீட்டினில்,
உதவிட்ட நாட்டினில்,
நரித்தனம் காட்டி,
நாட்டை அடிமையாக்கி அரசாள,
நூற்றாண்டுகள் பலகடந்து
அகிம்சா கடைபிடித்து,
பெற்ற சுதந்திரம் தனை
காற்றில் பறக்கவிட்டு
கைகட்டி நிற்ப தென்ன ? 

ஆரியணவன் வந்ததினால்
ஆத்ம வேதமது ஓதியதால்,
ஆச்சரியப்பட்டு நின்றதனால்,
ஒன்றாய் நின்ற தமிழன் தனை,
நால்வர்ணம் தனை புகுத்தி,
குலம்,கோத்திரம் என 
தன்னை உயர்வாக்கி,
தமிழனை தறியாக்கி,
நெய்தவனை தோலுரித்து,
சட்டைக்கும் செருப்பிர்க்கும்
சாதியை சாக்குகாட்டி
சாதிக்க பிறந்தவனை
சூத்திரனென சுட்டிக்காட்டி
இன்றளவும் அடக்கி 
ஆண்டுகொண்டு இருப்பவனை
கைகட்டி வேடிக்கை பார்பதென்ன?

மேற்கே அண்ணியனும்
வடக்கே ஆரியனும்
வந்தது போதாதென,
இல்லாத திராவிடத்தை,
இருப்பதென பொய்யுறைத்து,
அரியணை ஆசையில்
நாத்திகன் என தானுரைத்து
சோசியரின் சொல்படி
மஞ்சள் துண்டும்,
மரகத கல் மோதிரமும்
அணிந்துங்கு ஆட்சி செய்ய,
கொள்கை கோட்பாடெல்லாம்
காசின் முன் இடுகாடு செல்ல,
இடுகாட்டு கூரை முதல்
இடற்படும் காற்று வரை 
அத்தனையும் விற்றிங்கே
விழுங்கி நிற்கும் 
அரசியல் அயோக்கியர் களை
களை எடுக்க துணிவின்றி
தூனாய் நிற்பதேன்ன?

நெல்லும் கம்பும்
உயர்வரகும் சாமையும்
கேப்பையும் கொண்டு
உறுதியாய் இருந்தகாலம்
கணவாகிப் போனதேனோ?
பீசாவும், பர்க்கரும்
காற்றடைத்த பண்டங்களும்
நாவின் சுவை தீர்க்க,
ஆயுளின் காலமது
ஆவியாய் போவதை 
உணரத் தான் மறுப்பதென்ன?

ஈராயிரம் ஆண்டுகளாய்
எவ்விதமும் குன்றாது
அழகுத் தமிழின்
ஆழமது புரியாது,
அடிமை கொண்டவனின்
ஆளுமை பெரிதென
அவன் மொழியினை 
கொண்டாடி களிப்பதென்ன?

கேளாய் தமிழா,
நான் இயம்புவதை விடினும்,
நீ கேள்வியுற்றதை விடிணும் உன்
பாரம்பரியமும், பண்பாடும்,
நீண்டது, மிக நெடியது.
தலைமுறை பல கடந்து
தழைத்தோங்கும் நம் மரபை,
துளிர்க்கும் தளிராக,
மனதில் நட்டுவிடு,
ஒருநாள் பூவாய் மலர்ந்திடும்,
நம்பிக்கையோடு காத்திரு!!!

Saturday, April 4, 2020

3 மாத தவணை ஒத்திவைப்பு - நன்மையா ? தீமையா?

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் 3 மாதத் தவணை ஒத்திவைப்பு. நன்மையா ? தீமையா?
உலகம் முழுவதும் கொரோனா பரவிவரும் இச்சூழ்நிலையில், நாட்டின் பொருளாதாரம் மிகவும் தடுமாறி வருகிறது. சாமானியர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் மாதத் தவணைகள் என்னும் பெரும் சுமையை குறைப்பதற்காக அரசு பல நலத்திட்டங்களை அறிவித்து உள்ளது.வருவாய் இழப்பு மற்றும் சம்பளங்கள் வராமல் இருத்தல், தொழில்கள் முடங்கி போதல் போன்ற காரணிகளால் பணம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த காலத்தில் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவுப்புகள் இன்றியமையாததாகின்றது.


கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி, ரிசர்வ் வங்கியின் முதற்கட்ட அறிவிப்பின்படி பல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தனித்தனியாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாதத் தவணை விடுப்பு வழிமுறையை வழங்கி வருகின்றன. இது ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடுவதாகும். கீழே குறிப்பிட்டுள்ள தரவின் படி கடன் பெற்றோர் தங்களுக்கான மாதத் தவணை ஒத்திவைப்பு அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். என்றாலும் கூட இந்த அறிவிப்பு தங்களுக்கு சாதகமாக அல்லது பாதகமாக என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். இந்த மூன்று மாத ஒத்திவைப்பு காலத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி தொகையானது உங்கள் அசலில் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது மிகவும் முக்கியமான தகவலாகும். இப்போது நீங்கள் இரண்டு அல்லது மூன்று மாதம் உங்கள் மாத தவணையை ஒத்தி வைத்தால் உங்களது கடனை திருப்பி செலுத்த வேண்டிய காலம் 1 முதல் 1.5 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட லாம்.



இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி(SBI) 31 மார்ச்2020 அன்று ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளது. அதில்,
"ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி எஸ்பிஐ வங்கியானது 01/03/2020 முதல் 31/05/2020 வரை வசூலிக்கப்பட உள்ள மாதத் தவணைகளை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கிறது. அதே போல் 01/03/2020 முதல் 31/05/2020 வரையிலான நடைமுறை முதலீட்டின் வட்டியையும் 30/06/2020 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது "என தெரிவித்துள்ளது.


இந்த மூன்று மாத காலத்திற்கு தவனை செலுத்துவது மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதே தவிர, அதற்கான வட்டி கணக்கீடு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இந்த மூன்று மாதங்களுக்குப் பின்பு நாம் செலுத்த வேண்டிய வட்டி தொகையானது நமது வாங்கிய அசல் உடன் சேர்க்கப்படும். இதனால், ஒன்று நாம் இனிவரும் காலங்களில் செலுத்த வேண்டிய மாத தவணைகள் அதிகமாகும் அல்லது கடன் பெற்றோர் அதனை செலுத்தும் மாதத் தவணைகள் நீட்டிக்கப்படும்.




சில வங்கிகள் வெளியிட்டுள்ள மாதத் தவணை ஒத்திவைப்பு விபரங்களை இங்கு காணலாம் :

ஐசிஐசிஐ வங்கி :
( ICICI Bank )


இவ்வங்கியானது தனது கடன்களை இரண்டு வகையாகப் பிரித்துள்ளது.

"A வகை கடன்கள்"
இவை தானியங்கியாக மாதத் தவணை ஒத்திவைப்பு தேர்வு செய்யும். அதிலிருந்து வெளியேற வேண்டுமானால் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.

"B" வகை கடன்கள்
இவ்வாறு இந்த வகையில் தானியங்கியாக மாதத் தவணை ஒத்திவைப்பு நேராது. நாம் ஒத்திவைப்பு வேண்டுமானால் கீழ் உள்ள வழிமுறையை பின்பற்ற வேண்டும்.
இணையதள முகவரி :
https://www.icicibank.com/managed-assets/docs/personal/COVID-regulatory-package-FAQs.pdf

எச்டிஎஃப்சி வங்கி
(HDFC Bank)
உங்களுக்கு மாதத் தவணை ஒத்திவைப்பு வேண்டாம் என்று நினைத்தால் நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்யத் தேவையில்லை.உங்களுக்கு ஒருவேளை மாதத் தவணை ஒத்திவைப்பு வேண்டுமானால் நீங்கள் கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி அதை செயல்படுத்திக் கொள்ளலாம்.

இணையதள முகவரி :
https://www.hdfcbank.com/personal/pay/payment-solutions/loan-repayment



கோடக் மஹிந்திரா வங்கி
(Kotak Mahindra Bank)


மாதத் தவணை ஒத்தி வைப்பு திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் வங்கிக்கு ஒரு ஈமெயில் கடிதம் எழுத வேண்டும். இந்த ஒத்திவைப்பு காலத்தில் வட்டி வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு முகவரி : 
https://www.kotak.com

ஐடிபிஐ வங்கி
(IDBI Bank )

இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மாதத் தவணை ஒத்திவைப்பு இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள அவர்கள் moratorium@idbi.co.in என்ற முகவரிக்கு ஏப்ரல் 15 2020 க்குள் இமெயில் அனுப்ப வேண்டும்.

இணைப்பு முகவரி :
https://www.idbibank.in/faq-covid-installment.asp


இந்த தவணை ஒத்திவைப்பு கீழ்கண்ட எடுத்துக்காட்டின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம் :

உதாரணமாக நீங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையானது ஒரு லட்சமும் (RS.1,00,000) அதற்கான வட்டி 12 சதவீதமாக இருக்கும் போது, நீங்கள் மாத மாதம் செலுத்த வேண்டிய வட்டி ₹1000 ரூபாய். இப்பொழுது நீங்கள் 3மாதம் மாதத்தவணை ஒத்திவைப்பு முடிவை எடுத்தால், நீங்கள் மூன்று மாதம் கழித்து நீங்கள் ₹3030.10 ரூபாய் வட்டியாக கட்ட வேண்டி வரும்.


அதேபோல, இப்போது 20 லட்ச ரூபாய்க்கு ஒரு வாகனம் வாங்கியிருந்தால் ஐந்து வருடத்திற்கு 9.5 சதவீத வட்டி என்று இருந்தால் நீங்கள் மூன்று மாதத்திற்கான வட்டியாக கூடுதலாக 47 ஆயிரத்து 500 ரூபாய் கட்ட வேண்டிய வரும் (அதாவது இது 1.5 மாதத்திற்கான கூடுதல் தவணைத் தொகைக்கு ஈடான தொகையாகும்)





எந்தன் ஆலோசனை யாதனின் :

உங்கள் பணம் வருவாய்க்கான தடை இருந்தாலோ அல்லது உங்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருந்தாலோ, நீங்கள் ரிசர்வ் வங்கியின் இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம். இருந்தாலும் நீங்கள் செலுத்தவேண்டிய மாத தவணைக்கான வட்டி, இப்போது செலுத்தாமல் இருந்தாலும்கூட, அது 3 மாதங்களுக்கு பின்னர் உங்கள் அசலில் சேர்ந்து தவணையின் மதிப்பை அதிகப்படுத்தும் என்பதனை நாம் இவ்விடத்தில் நினைவு கொள்ளுதல் அவசியமாகிறது. உங்களால் இந்தப் பொருளாதார இக்கட்டை சமாளிக்க முடியும் என்றால், நீங்கள் எப்பொழுதும் போல் உங்கள் மாத தவணையை செலுத்தி வரலாம், ஒருவேளை உங்களால் இந்த சூழ்நிலையை கையாளும் முடியாவிட்டால் நீங்கள் மாத தவணை ஒத்திவைப்பு நடவடிக்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இத்தேர்வின் மூலம் உங்களின் கடன் சுமையும் நீங்கள் செலுத்த வேண்டிய காலமும் நீக்கப்படலாம் என்பதனையும், அது எதிர்காலத்தில் தங்களுக்கு மேலும் ஒரு சுமைதான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நன்றி.



(இந்த தரவு பயனுள்ளதாக இருந்தால் மற்றோர்க்கும் பகிர்ந்து உதவவும்)

Monday, March 30, 2020

"அன்பே கொரோனா"

வருக! வருக!
உகானில் தொடங்கி
எம்மவர் மோடி போல்
உலகம் சுற்றிப் பார்க்க
உற்சாகமாய் வரும்
அன்புக் கொரோனா - வே
வலது கால் வைத்து
வந்துவிடு நாட்டிற்குள்...

வந்தாரை வரவேற்று
விருந்தோம்பல் புரிவதில்
எம்தமிழ் குடிகளுக்கு யாரும்
 நிகருன்டோ இவ்வுலகில் - இக்
கவிதனை காண்கின்ற
 கண்கள் யாதொன்றும்
ஆச்சரியத்தால் விரிவதில்
 ஆச்சரியமில்லை எமக்கு.

உலகமே உன்னை
 "தூற்றிக்" கொண்டிருக்க,
 இருகரம் கூப்பி நின்புகழை
 "போற்றிக்" துதிபாடி
 வரவேற்பது நானே நானாக 
 மட்டும்தான் இருக்கும்.

அறிவியலை கேட்டால் 
உன்னை "கிருமி" என்னும்.
அழகனை  கேட்டால்
உன்னை "கருமி" என்பேன்.
ஆம், பைசா செலவில்லாமல்
 பழக்க வழக்கம் 
பலவற்றை பக்குவமாய்
சொல்லித் தருகின்றாயே...

ஐந்து  அங்குல
இடைவெளியில் அடுக்கடுக்காய்
தொங்கும் கைப்பிடியை,
கைப்பிடிக்க கைகள் பத்து
போட்டி போட, 
தன் மூச்சு காற்றை
தானே சுவாசிக்கும், - இந்த
கான்கிரீட் காடுகள் வாழ்,
கார்ப்பரேட் பிரஜைகள்
 யாவும் தினம்தினம் 
ரயிலில் பயணிக்க,
யாருக்கும் சொல்லாமல்,
உன்னைப்போலவே
அனுதினமும் அனைவருக்கும் 
வந்துவிடும்  தும்மல் தனை,
எதிர்,புறம், மேல், கீழ் 
சுற்றம் முற்றம் என
என எத்திசையும் பாராமல்
எச்சிலை அள்ளித் 
தும்மித்  தொலைக்கும்
அறிவிலி ஜீவன்களுக்கு
கைக்குட்டை பயன்படுத்த
அழகாய் சொல்லித்தந்தாய்...


தலைசாயும் செங்கதிரை
தலையோடு கோதுவதாய்
தினந்தோறும் தான் எண்ணி
போகையிலும் வருகையிலும்
கிருமிகள் யாவும்
சகல சௌபாக்யத்தோடு 
குடித்தனம் நடத்தும் 
சுற்றுச்  சுவற்றை எல்லாம்
அனுபவித்து தடவி வந்து,
கை ஏதும் கழுவாமல்
நாயர் கடைதன்னில்
நாள்பட்ட எண்ணெயில்
தற்கொலை செய்துகொண்ட
பஜ்ஜியை எடுத்து தின்னும்
அருஞ் சுவை மன்னர்களை
சோப்புத் தண்ணீரில்
கைகழுவ செய்தாய்....!

திறந்து வைத்த நாள் முதல்
தண்ணீரை கூட
கண்டிராமல் காய்ந்திருக்கும்
அரசு மருத்துவமனைகளின்
 தரைகளை யாவும்
கிருமி நாசினி கொண்டு 
கழுவச் செய்து,
உன் சொந்த பந்தங்களான
ஏனைய வைரஸ்களை
பூவுலகம் அனுப்பி வைத்தாய்...!

காலச்சக்கரத்தின்,
ஆயுள் கைதிகளாய்,
அடைபட்டு கிடந்த
மண்ணுலக மனிதர்களுக்கு
21 நாட்கள் பெயில் 
கொடுக்கச் செய்து
ஞாயிற்றின் காலையும்
திங்களின் காலையும்
வேறுவேறு அல்லவென
உணர்த்திச் சென்றாய்...

வஞ்சம்  சூழ்ச்சி,
பொறாமை பொய்
போட்டி பேராசை
சண்டை சச்சரவு
சபலம் சுயநலம்
மதம் சாதி
குலம் கோத்திரம் 
உயர்ச்சி தாழ்ச்சி வென
ஆயிரம் கொரோனாக்களை
தன்னகத்தே கொண்டுள்ள
அற்ப மனிதனுக்கு 
"மனிதத்தின்" மகத்துவத்தை
அழகாய் புரியவைத்தாய்...!

ஒழுக்கத்தின் விழுப்பம் தனை
ஒழுங்காய் கற்றிடாமல்
வள்ளுவனின் வாக்குதனை
வகுப்போடு மறந்துவிட்டு 
வாட்ஸ் அப்பிலும் பேஸ்புக் கிலும்
வந்திந்திகளை பரப்பி வருகிறோம்
வீழாமல் என்றென்றும்
விழிப்புற மாட்டோம் என
கங்கணம் கட்டிக்கொண்ட
மானுட மாக்களுக்கு
நல்லுரை வழங்கிட 
வைரசாக வந்தவும்மை
வணங்காமல் இருந்திடுவோமா
இல்லை மறந்து தான் 
கடந்திடுவோமா..?

Wednesday, March 11, 2020

"குரு தட்சணை"

'அ' வென்றும் 'ஆ' வென்றும்
சிலேட்டில் எழுதி, சொல்லி
வந்த எமக்கு பத்தாம் வகுப்பு
வந்த பின்பு தான்
'அகரம்' என்றும் 'ஆகாரம்' என்றும்
சொல்லப் பழகித் தந்தாய்...!

ஆண் உயர்வா இல்லை
பெண் உயார்வா என்று
அறியா வயதில் புரியா
சண்டை செய்த எமக்கு
ஆணும் பெண்ணும்
சமம் என்று அறிவுரை செய்தாய்..!

அர்த்தம் புரியாமல்
மேல் கணக்கும், கீழ் கணக்கும்
மனப்பாடம் செய்த எமக்கு
சுதி, தாளம், இராகம் சேர்த்து
பாடலாக வடித்துத் தந்தாய்.

வகுப்பறைகள் தோறும்
பேசுவோரே கண்காணிக்க
இருவர் இருந்த நிலையில்
ஒழுக்கத்தின் மேன்மை
சொல்லி 'லீடர்' இல்லா
வகுப்பறையாக மாற்றி
புது புரட்சி செய்தாய்...!

கோனார் உரையில்
வினா விடை மட்டுமே
படித்து மதிப்பெண்
பெற தெரிந்த எமக்கு
நாபிறழ் பயிற்சியும்,
பொது அறிவு பக்கத்தையும்
படிக்கச் செய்தாய்...!

முதன் வகுப்பே
உன் வகுப்பாய்
தான் இருக்க,
பல சிந்தனையில்
பள்ளி வரும் எமக்கு
உன் நகைச்சுவையால்
செல்லக் கடி கடித்து
அத்தனையும் மறக்கச் செய்தாய்...!

'சார்' என்றும் 'மேடம்' என்றும்
ஆங்கிலத்தில் அழைத்தே
பழகிய எம் நாவிற்கு
'ஐயா' என்று அழகிய
தமிழில் அழைக்க
பழக்கம் செய்தாய்...!

டியூஷன் வகுப்பில்
ஒன்று, கதை பேசி
கழித்திருபோம் அல்லது
வீட்டுப் பாடம் எழுதி
முடித்திருப்போம் ஆனால்,
நீ வந்தே பின்னே
கவிதையும், பாட்டும் பாடசொல்லி
எங்கள் தனித்திறமை
யாவென எங்களை
அறியச் செய்தாய்...!

தூரத்தில் ஆசிரியர்
சென்றாலே ஒளிந்து
கொண்ட நாட்களை,
விடுமுறையில் கண்டாலும்
எதிர் சென்று வணக்கம்
செய்யும் நாட்களாய்
மாற்றிய "ஆசு அரியரும்"
நீ தானே...!

பிள்ளைகளுக்குள் பேதமின்றி
பொதுவாக நடத்தும் தாய்போல,
மாணவர்களுக்கு பேதமின்றி
அனைவரையும் ஒன்றுபோல,
அன்புவழி காட்டி
தோளில் கைபோட்டு
அரவணைத்துக் கொண்ட
அன்பாசிரியர் நீ தானே...!

கற்றவையும் கற்பவையும்
மட்டுமே சொல்லித் தர
இங்கே ஆயிரமாயிரம்
ஆசிரியர் இருக்க
"நிற்க அதற்கு தக"
என சொல்லிய ஆசிரியர்
நீ மட்டுமே  என
என்றும் பெருமை
கொள்வோம் நாங்கள்...!


(எந்தன் தமிழுக்கு விதை இட்டவர். ஆசிரியர் என்னும் புனித உறவை தாண்டி எங்களிடம் அன்பு காட்டிய ஆசான் திரு. பிரபு அவர்களின் பிறந்த நாளில் இந்த மாணவனின் சிறு கவி - தட்சணை)



Saturday, March 7, 2020

"தியாகம் போற்றுதும்"


ஓடும் நதி போல,
ஓங்கும் அலை போல,
நில்லாமல் கரை தொடும்,
நிகரில்லா பெண்ணினமே,
உந்தன் தியாகமதை 
எண்ணத்தான் கணக்குண்டோ?


மலர்ந்த வீட்டின் மனம்
மறந்து, மணந்த வீட்டின்
மனம் மலர, நினைவுகளை
கடந்து நிற்பதை தான் 
தியாகம் என சொல்லலாகுமோ?


வாக்கப்பட்டு வந்த வீட்டில் - புது
வழக்கமதை கற்றிட்டு
வாசல் கோலமிட்டு,
வந்தவருக்கு வணக்கமிட்டு,
வாய்க்கு சுவை உணவிட்டு,
வாரிசை தான் சுமந்து, நாளும்
வந்தனம் தான் செய்யும்
செயலதை தான்,
தியாகம் என சொல்லலாகுமோ?


மன்னவன் முன்செல்ல
அவன்தன் முதுகெலும்பாக 
பின்னவள் நீ செல்ல,
மணவாளனை,
வாழ்த்தும் ஊரதுதான்,
உன்னை மறந்ததை,
மறந்துவிடும் தன்மையதை
தியாகம் என சொல்லலாகுமோ?


செய்யும் வேலைதான்
அச்சாய் ஒத்திருக்க,
ஆணினம் என்பதனால்
ஊதியம் அதிகம் 
கொடுத்திடும் சமூகமதை
பொருத்திருக்கும் உன் செயலை,
தியாகம் என சொல்லலாகுமோ?


அதிகாரம் தான் காட்டி,
ஆதிக்கம் தான் செலுத்தி,
இழிவாய் தான் பேசி,
ஈதை தான் தந்து,
உற்றார் முன் இகழ்ந்து,
ஊரார் முன் ஏசி,
எட்டி தான் உதைத்து,
ஏளனம் தான்  பேசி,
ஐயுரவு தான் காட்டி,
ஒடுக்குமுறை தான் நீட்டி,
ஓரம் கட்டி இழிநிலை காட்டி,
ஔவியம் கொள்ளும் ஆணினத்தை,


அன்பால் தான் திருத்தி,
ஆதரவு தான் தந்து,
இன்முகம் தான் காட்டி,
ஈடில்லா தியாகம் தந்து,
உறவின் மகிமை காட்டி,
ஊன்றுகோலாய் துணை நின்று,
எண்ணத்தால் நிமிர்ந்து,
ஏற்றத்தாழ்வு   மறந்து,
ஐந்தொழிலும் ஒருசேர
ஒன்றாய் தான் செய்து,
ஓர்மை தான்  கொண்டு,
ஔடதமாகும் பெண்ணினமே,


வாழ்த்ததனை சொல்லிவிட்டால்
வணங்குவதாய் அர்த்தமில்லை,
அனுதினமும் தொழுதும்மை,
அடினெஞ்சில் போற்றிடுவேன்,
கழியும் வருடமதில் கடக்கும்
ஒரு நாள் பொழுது உமதல்ல,
ஆணினம் சுவாசிக்கும் 
ஒவ்வோர் நொடியும் உமதே.!

Saturday, February 8, 2020

"அவள்தான் அவளேதான்"

அவள்தான்,
பாவும் மாவும் டாவும்
ஓயாமல் ஒலித்த 
எந்தன் நாவினில்
(அண்)நா, (அண்) நீ என
 புதுமொழி புகுத்தியவள்
அவள்தான்.

அவள்தான்,
பா - சொரியும் எங்கள் வீட்டினில்
புன்னகையாய் பூச் சொரிய
வந்தவளும்,
 அவள்தான்.
 
அவள்தான்,
கால்நூற்றாண்டு
காலமாய் ஆண்மகவு
அதிக்கம் புரிந்த 
எங்கள் வீட்டினை
அமைதியாய் ஆட்கொள்ள
வந்தவளும்
 அவள்தான்.
 
அவள்தான்,
மாத்திரைகள் வாசம்
புரிந்த எங்கள் வீட்டினில்
மூலிகைகளின் சுவாசம்
புரியச் செய்தவளும்
அவள்தான்.

அவள்தான்,
வேட்டி,சட்டை, சேலை
மட்டுமே கண்டு
காய்ந்து போன
எங்கள் வீட்டு கொடிகளுக்கு
சுடிதாரின் தரிசனம் தந்தவளும்
அவள்தான்.

அவள்தான்,
கண்மையும், முகப்பூச்சும்
கண்டிராத எங்கள் வீட்டு
கண்ணாடிகளுக்கு
ஃபேர் அன் லவ்லி
காட்டி கண் திறந்து வைத்தவளும்
 அவள்தான்.

அவள்தான்,
தாயும் தந்தையுமாய்
இருந்த எந்தன்
பெற்றோர்களுக்கு
தாத்தா பாட்டியாய்
பதவி உயர்வு 
அளிக்க போவதும்
 அவள்தான்.

"அவள்தான்,
அவளேதான்"
எந்தம் இல்லத்தின்
புதியதோர் 
பட்டத்து இளவரசிக்கு
எந்தன் புது தாயவளுக்கு
இந்த கவிமகனின்
மனமார்ந்த
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!
🍰🎁🎂🎈🎉

Saturday, December 21, 2019

வரவேற்புரை! (அண்ணன் திருமணம்)

பொதுவாக எனக்கு கடன் கேட்கும் பழக்கம் இல்லை. ஆனால், காலத்தின் கட்டாயம் இன்று கடன் கேட்கப்போகிறேன்... உங்கள் அனைவரிடமும்!?

ஆம், உங்கள் வாழ்வின் பொன்னான அடுத்த அரை மணி நேரத்தை எங்களுக்காய் ஒதுக்க வேண்டுகிறேன்.

 வருடத்தில் குறைந்தது  பத்து திருமண நிகழ்வுகளில் பங்கேற்று விடுவீர்கள். இதே சொந்தம் அங்கும் வரும். இதே பேச்சை அங்கும் பேசலாம். ஆனால், இத்திருமண தம்பதிக்கு வாழ்வில் இத்தருணம் மீண்டும் கிட்டவே கிட்டாது.

அனைவரும் வருகவென இரு வரியில் நான் முடித்தால், அந்த வரிகள் கூட என் மேல் வஞ்சனை கொள்ளும். ஆகவே, வார்த்தைகளை கோர்வையாக்கி, மணமக்களுக்கு "பூமாலை" போல, உங்களுக்கு ஒரு "பாமாலை" அணிவிக்கிறேன்!.

அதில் ஒரு சிறு - பூவை எடுத்து "சிரிப்போடு" அட்சதை தூவி "சிறப்போடு" வாழ்த்துங்கள் மணமக்களை...!

  •  உயிர் எழுத்தின் முதலெழுத்து, உயிர் கொடுக்கும் மூச்செழுத்து அவள் தான் "அம்மா".காலத்தின் ஓடத்தில் தன்னை படகாக்கி, என்னை பயணிக்க செய்பவளே உனக்கு என் முதல் வணக்கம்!

  • உந்தன் கண் வழியே உலகத்தை கண்டு கொண்டோம். இன்று உலகமே எங்கள் கண்முன்னே. இப்போது உந்தன் உலகத்தை நாங்கள் தேடுகிறோம். உந்தன் விரல் பட்டு செதுக்கிய சிற்பத்தில் ஒன்று, விழிதிறந்து உற்சவம் காணப் போகிறது. அன்பு தந்தையே உனக்கு என் தமிழ் வணக்கம்!

  • அவனாய் இருந்தவன், அவராய் மாறுகிறார் அண்ணியவள் வருகையால்!எந்தன் உலகத்தை எனக்கு முன்னே கண்ட உதிரம், அண்ணன். அவனது மூச்சுக்காற்றில் இன்றளவும் நான் சுவாசித்துக் கொண்டு இருக்கிறேன். அண்ணியவளுக்கு "உரியவன்" ஆனாலும் என்றைக்கும் எனக்கு "உயிரவன்" நீ. அன்பில் அண்ணனே உனக்கு என் அக வணக்கம்!

  • அவனும் அவளும் வந்து, அவனையும் இவனையும் பெற்று, அவனும் வளர்ந்து அவராகுகையில், அவனுக்கான அவளைத் தேடி, அவளை அவனுக்கு கொடுக்கையில் அவளுக்காக ஒரு கவிதையை இவன் வாசிக்கிறான். இனிமேல் என் வீட்டில் அண்ணனும், அப்பாவும், அம்மாவும் இரண்டாகிறார்கள். சம்பந்தி வீட்டார்க்கென் சம வணக்கம்!


உறவினர்கள் ஒவ்வோர்க்கும், ஒரு பக்கக் கவிதை பாடிட ஆசை தானெனக்கு.  கவி மகளுடன் நான் பேசத் தொடங்கினால், மணமகள் மருமகள் ஆயிட நேரம் ஆகிடும். ஆதலால் சுருக்கமாய் உறவுகள் ஒவ்வொன்றையும் ஓர் வரியில் விளிக்கிறேன்.


~ தன் தோளில் எமை சுமந்து உலகத்தை சுற்றி காட்டிய தாய்மாமனே.

~ எம்மை அன்பால் மூழ்கடித்து, உணவுப் பண்டங்கள் ஊடே உறவு பந்தத்தை ஊட்டி வளர்த்த அத்தைமார்களே.

~ தாயவள் தந்தையவன் நீட்சியாய், பிள்ளைகளிடம் பேதமின்றி எங்கள் விடுமுறையை விழாவாக்கிய சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மாக்களே.

~ அன்பின் வாசத்தை அம்மா அப்பாக்களை விட அதிகமாக காட்டிய ஐயா- அப்பத்தா, ஐயா- அம்மணிகளே.

~ ஒரு தாய் வயிற்றில் பிறக்காத போதிலும், ஒரே இரத்தமாக எம் கூட பயணிக்கும் அண்ணன், தம்பி, அத்தான், அத்தாச்சிகளே.

~ மண் கோட்டை கட்டி, சொப்பு சாமானில் உலை வைத்து ஊருக்கே உணவிட்டு, தன்னை ராணியாக்கி, அழகு பார்த்துக் கொள்ளும் அத்தை, மாமன் மகள்களே,

~ உறவு ஏதுமின்றி உதித்த பூக்கள்,உறவைவிட உறுதியாய் நாளும் மலர்ந்திடும் நறுமலர்களாக இங்கே பூத்திருக்கும் நட்பூக்களே,


உங்கள் அனைவருக்கும் இந்த அழகனின் அழகான வணக்கங்கள்.






Saturday, November 30, 2019

"அன்பின் முகவரி"

இகல் வெல்லும் இழிச்சொல்லும்,
பகை வெல்லும் பழிச்சொல்லும்,
முன்செல்ல துதிபாடி,
பின்செல்ல சதிபாடி,
வஞ்சப் புகழ்ச்சியாய்
கெஞ்சிப் பிழைக்கும் பிழைப்பெதற்கு?

அதிகார திமிர் காட்டி,
ஆணவத்தின் முகம் காட்டி,
ஆளுக்கொரு வேசம் காட்டி,
அண்டி வந்தவரை,
அகம் மகிழ முகம் காட்டி,
அடினெஞ்சில் பகை காட்டி,
அடிமை கோலம் செய்ய,
அடிபணிய செய்வதேனோ?

வெஞ்சினிம் தீர்த்திட,
வென்சாமர கொடியெதற்கு?
ஆறாய் நெளிந்தோடும்
கண்ணீர்க்கு கடைமதகெதற்கு?
கசக்கி எறிந்த காகிதத்திற்கு
மரண தண்டனை தான்னெதற்கு?
கோவலனை கொன்றபின்
கண்ணகிக்கு கோயிலெதற்கு?

அறியா மானுடமே - பிறரை
மதியா மானுடனே,
கருவறை வாசலில் 
பிரசவித்த மறுநொடியே
அன்பின் கயிறான
தொப்புள் கொடிபோல
கத்தரிப்பது ஏனோ?

கலியுக மாணுடனே
காலத்தின் ஓடத்தில்
ஓடிக்கொண்டே இரு
நின்றுவிட்டால்...
நதி என்பார்கள்
குறைந்து விட்டால்...
குளம் என்பார்கள்
குனிந்து விட்டால்...
குட்டை என்பார்கள்
தேங்கி விட்டால்... 
சாக்கடை என்பார்கள்
நித்தம் பொழிவுரும்
நதியின் தூய்மையா?
நித்தம் கழிவுரும்
சாக்கடையின் நாற்றமா 
உன் முடிவை என்னது?

போனதுதான் போகட்டும்
போரது முடியட்டும்
போதையது தெளியட்டும்
ஆவேசம் குறையட்டும்
அன்பது புரியட்டும்..

உணர்ந்திடு மானிடா - இது
உனக்கே உனக்கான உலகம்,
அன்பு விசை கொண்டு
அகிலத்தை பார்,
உள்ளம் அழகாகும்.
காலச் சக்கரத்தை
அன்பு கொண்டு சுழற்றிடு,
ஒவ்வொரு அடியும் 
உன்னதமாக கடக்கும்.

அரபிக் கடலின்
அழகிய மீனாய்
அன்பு கடலில்
மூழ்கி முத்தெடு.
கடந்திட்ட காலம்தான்
கடலோடு போகட்டும்,
இனிவரும் காலம்தான்
இன்பமாய் கழியட்டும்...! 

Sunday, September 1, 2019

விடுமுறையில் விநாயகர்

காடு கரை ஏரி குளம் தான் படைத்தேன்,
கடைசியில் இவை காக்க,
மனிதவினம் தான் படைத்தேன்.
ஆடி வந்ததும் என்னை
தேடி வந்தது சூறை காற்று,
மறந்தும் கூட மறக்கவில்லை
மும்மாரி மழை கொடுக்க,
ஆஹா, அற்புதம் என்றேன்,
மனித மனம் மரகதம் என்றேன்,
காப்பதிலே என்னை மிஞ்சுவான் என்றேன்,
அளவுகடந்த ஆவலில்,
கோடை விடுமுறைக்கு,
விண்ணுலகில் விடுப்பு கேட்டு
மண்ணுலகம் தான் வந்தேன்,
உலகம் சுற்றினேன்,
என்னை மறந்தேன்,
எங்கும் பச்சை பசேல்,
செழிக்கும் காடு,
துடிக்கும் ஆறு,
மிடுக்கும் மலை,
சிலிர்க்கும் மழை,
துளிர்க்கும் செடி,
மடை மீதேறி நின்று
 ஏரிக்கரை தான் பார்த்தேன், 
 ஒருமுறையும் மறுக்காமல் மறுகால், பாய்ந்தது.
 படைத்த பொழுதை விட
 இப்பொழுது பூரித்து
 கிடந்தது பூமி,
 அகம் மகிழ்ந்தேன்,
 அற்புதம் என்றேன்.
 நீங்கா நினைவோடு
 விடைபெற்றேன்.
 விண்ணுலகம் தான் சென்று,
  மறுமுறை தான் வந்தேன்,
  வழி மாறி வந்தோமோ என்று
  விழி கசக்கி பார்த்தேன்,
  அதே இடம் தான்,
  அதே மக்கள் தான்,
  ஆனால்...
 கடந்த முறை கண்ட காட்சி
 கனவாகிப் போனதோ,
 மேற்கே சென்றேன்,
 பச்சை போர்வை போர்த்தி
 மண்ணுலக மனிதனுக்கும்,
 வின்னுலகத்திற்கும் சேர்த்து
 ஆக்சிஜன் தான் அனுப்பிய,
 அமாசான் காடு,
செக்கச் சிவப்பாய் 
தீந்தனல் கக்கியது,
அகதியாய் அ(டி)டைபட்டு கிடந்தது,
பிறப்பு முதல் இறப்பு வரை,
மனிதனை அனைத்தது மரம்,
பற்றி எரியும் போது கூட
அணைக்க மறந்து ஆண்ட்ராய்டு
ஆதிக்கத்தில் அடிமையாய் மனிதவினம்.
தலை கவிழ்ந்து தலை வைத்தேன்
தெற்குப் பக்கம்,
இயற்கையை கடவுளாய் வழிபட்ட
தமிழினம் கண்டிப்பாய் மாறாது
என்ற நம்பிக்கை தான் விடவில்லை.
கரடு முரடு பாதையிலே
கடந்து வர காலம் தான் கடந்து போனது
மூஞ்சூறுக்கும் மூச்சிறைத்து போனது.
வந்து சேர்ந்தேன்,
வாய் பிளந்தேன்,
என்னைப் போல் ஆயிரம் சிலைகள்,
ஊர்வலமாக நான் செல்ல,
என்னையே படைத்து
 ஊர்வலமாய் கொண்டு சென்றனர். 
 அடடா, என்று ஆச்சரியம் கொண்டு,
 அவர்களைத் தான் தொடர்ந்தேன்.
 வெட்ட வெளி மைதானம் கண்டேன்.
 மைதானம் நடுவே குழி ஒன்று,
 குழிக்குள்ளே தண்ணீர் நிரப்பும்
 சுமையுந்து இரண்டு,
 என்னடா கூத்தென்று 
 எண்ணி பார்த்ததால்,
 கரைக்க நீர் இன்றி
 கரையில் குழி வெட்டி
 குழிக்குள் கரைக்க போகிறார்களாம்.
 என்னடா கொடுமை என்று,
  மடை மீதேறி நின்று 
  ஏரிக்கரை தான் பார்த்தேன், 
  அப்போது தான் புரிந்தது, காக்க படைத்தது மனிதனை அல்ல மடையர்களை என்று...!

Sunday, August 4, 2019

"உரையும் - நடையும்"

பாவே,
பாரதியை,
"நிமிர்ந்த நடையும்,
நேர்கொண்ட பார்வையும்",
வேண்டும் பெண்டிற்கு   என்றாயே,
மெய்த்துப் பொய்தனவோ உன் வரிகள்
உன் சொல்லால் உயர்ந்து - இன்று
செல்லால் குனிந்த பெண்டிர் குலத்தை
காண தான் வாராயோ...!


அறிவே,
அவ்வையே,
"ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்" என
நல்வழி சொன்னாயே,
பாலாறும் தேனாறும்
பாய்ந்தோடிய பொன்னிலத்தில்
ஆற்று மணல் அல்ல
லாரிகள் ஓடுவதை கானத்தான் வாராயோ...!


வண்டமிழ் வேந்தனே,
வள்ளுவனே,
"மெய்ப்பொருள் காண்ப தறிவு"
என விழிச்சொல் கொடுத்தாயே,
கண்டனம் ஏதும் இன்றி
அங்கொன்றும் இங்கொன்றும்
கண்டதும் பகிர்வதை
காண தான் வாராயோ...!


இனியனே இளங்கோவடியே,
"அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாகும்" என
அருஞ்சொல் வீசினாயே,
அரசியலில் பிழைப்பதற்கு
அறமே எதிரியாகும்
என வாய்பாடு வகுத்து
வஞ்சகம் புரிவோரை
காண தான் வாராயோ...!


கவிசக்கரவர்த்தியே,
கம்பர் பெருமானே,
"பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும்,
பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?"
என பாடம் சொன்னாயே,
உன் பாட்டதும் மறந்து,
பின் பட்டதும் மறந்தும்,
வேண்டா சொல்லயே
வேதமாய் கொண்டலையும்,
மதிகெட்ட மனிதர்களை
காண வொருமுறை வாராயோ...!


மாணிக்கமே,
திரு வாசகனே,
"சொல்லிய பாட்டின்
பொருள் உணர்ந்து"
என கற்றல் வழி சொன்னாயே,
கற்றல் மொழி மறந்து
கத்தல் மொழியை
வழியாக்கி பின் வலியாக்கிய எம்மை
காண வொருமுறை வாராயோ...!


கற்கும் கல்வியதை
மதிப்பெண் தரும்
பாரமாய் பாராமல்
மதிப்பளிக்கும் மதியுமாய்
பொருளளிக்கும் பொண்ணுமாய்
"கற்றபின் நிற்க அதற்கு தகவென"
வள்ளுவன் வழி நடந்திடுவோம்...!








Thursday, March 7, 2019

பெண்மை போற்றுதும்...!

"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்,
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்,
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!"

நிமிர்ந்த பார்வையும் நேர் கொண்ட நடையும் வேண்டும், என்ற புரட்சிக் கவிஞன் பாரதியின் வரிகள் இவை. பாரதியாரின் இவ்வரிகள் உண்மையாகவே நிகழ்த்த பட்டிருக்கின்றதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.பெண் சுதந்திரம் என்று எல்லோருமே பதிவிட்டாலும், பேசினாலும் அதை நடைமுறையில் இன்னும் முழுமையாக பெண்களுக்கு கிடைக்கவில்லை என்பதே வருந்தத்தக்க உண்மை. ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் மகளிர் தினத்தன்று அனைவரும் தங்களுடைய தாய்,தோழி,தமக்கை மற்றும் உறவு பெண்மணிகளின் படங்களை பதிவிட்டு மகளிர் தின வாழ்த்துக்களை கூறுகிறோமே தவிர உண்மையில் அவர்களுக்கான சுதந்திரத்தையும் அவர்களுக்கான தனித்துவமான இடத்தையும் விட்டுக் கொடுத்தோமா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏன் வந்தது இந்த பெண்கள் தின கொண்டாட்டம், ஒவ்வொரு தினமும் பெண்கள் தினமாய் ஆகிட என்ன செய்திட வேண்டும் என்பதனை இங்கே காண்போம்.

பெண்கள் தின வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும் என்றால் நாம் நூறு ஆண்டுகளுக்கு முன் செல்ல வேண்டும்.

• 1850 களில் அமெரிக்க மாகாணத்தில் துணிகள் உற்பத்தி செய்யும் தொழிலே பெரும்பான்மையான மக்களால் செய்யப்பட்டது. ஆனால் அவ்வாறான வேளைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உணவு,சம்பளம், வேலை நேரம் போன்றவற்றில் பெரிதும் பாகுபாடு காட்டப்பட்டது.ஆண்கள் எட்டு மணி நேரம் வேலை செய்தனர் என்றால் பெண்கள் 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வேலை செய்ய நிர்பந்திக்க பட்டனர்.மேலும் வேலைக்கேற்ற ஊதியமும் அவர்களுக்கு நிராகரிக்க பட்டது. தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக பெண்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இது பெண்கள் தங்கள் சுதந்திரத்தை காக்க எடுத்த வைத்த முதல் அடி எனலாம்.

• அதன் பிறகு, தெரசா மாலிகெல் என்பவரின் ஆலோசனைப்படி
பெண்கள் தினம் முதன் முதலில் 1909 ஆம் ஆண்டு அமெரிக்காவில் "தேசிய பெண்கள் தினமாக" அமெரிக்க பொதுவுடமை கட்சியால் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு உலகம் முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

• 1910 இல்  டென்மார்க் நகரில் "சர்வதேச பொதுவுடமை பெண்கள் மாநாடு" நடைபெற்றது. 17 நாடுகளை சேர்ந்த 100 பெண்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

• அதற்கு அடுத்த வருடம், அதாவது 1911 இல் ஆஸ்திரியா,டென்மார்க், ஜெர்மனி போன்ற நாடுகளில் லட்ச கணக்கான பெண்களால் ஒன்றாக இணைந்து பெரு விமர்சையாக கொண்டாட பட்டது.

• 1975 இல் ஐக்கிய நாடுகள் சபையில் பெண்கள் தினம் முதல் முறையாக கொண்டாடப்பட்டது.

• 1977 இல் ஐக்கிய நாடுகள் சபையில் பெண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் எட்டாம் தேதி கொண்டாட படும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

• அதன் பின் 1996 முதல் ஒவ்வொரு வருட பெண்கள் தினமும் ஒவ்வொரு கருத்தை மையமாக கொண்டு கொண்டாட பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பெண்கள் தினம் " ஊரக மற்றும் நகர்புற பெண்களின் வாழ்வியலை மாற்ற இதுவே நேரம்" என்னும் கருத்தியலை கொண்டு கொண்டாட பட்டது. இந்த ஆண்டிற்கான கருத்தாக "சமாமாக நினைத்திடு, புத்திசாலியாக வளர்ந்திடு, மாற்றத்திற்கு முனைந்திடு" என்னும் கருத்தியலை கொண்டு கொண்டாட பட உள்ளது.

"மாற்றம் என்பது சொல் அல்ல செயல்"

வெறும் மாற்றம் மாற்றம் என்றால் அது என்பது எந்நாளும் வராது. ஒரு கனவாகவே கடந்து விடும். நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த பெண்கள் வாழ்விற்கும், இப்போது பெண்கள் வாழும் வாழ்க்கை முறைக்கும் அளப்பரிய வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதனை யாரும் மறுத்து கூற முடியாது. ஆனாலும் பெண்கள் விரும்பும் வாழ்க்கை அவர்களுக்கு கொடுக்கப்படுவது இல்லை.  எத்தனையோ ஆண்டுகள் போராட்டதிற்கு பின்பு பெண்கள் அடுக்களையில் இருந்து தங்களுக்கான விடுதலையை பெற்று விட்டனர். இந்தக் கால கட்டத்தில் பெண்கள் நுழையாத துறையே இல்லை எனலாம். ஆட்டோ ஓட்டுனர் முதல் விமானம் ஒட்டும் வரை, தொழில் நிர்வாகம் முதல் ஒவ்வொரு துறையிலும் கால் பதித்ததோடு மட்டும் அல்லாமல், தத்தம் துறையில் மிகப்பெரிய வெற்றியும் பெற்று சாதித்து காட்டி உள்ளனர். "அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு" என ஏளனப் பேச்சு பேசியோர் மத்தியில், நம்மாலும் சாதிக்க முடியும் என்ற வெற்றி வேட்கை கொண்டு போராடி அதில் வெற்றியும் கண்டுள்ளனர் நம் பெண்டிர். உதாரணமாக  இந்தியாவின் முன்னணி குளிர்பான நிறுவனம் பெப்சி. இந்த நிறுவனத்தின் உயரிய பொறுப்பான தலைமை நிர்வாக அலுவலராக பணியாற்றி பெருமை சேர்த்தார் இந்திரா நூயி என்னும் பெண்மணி. அதே போல் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் உயரிய பொறுப்பில் இருந்து தங்களுக்கான ஆளுமையை நிரூபித்து காட்டினர். நிர்வாக துறை ஒரு புறம் என்றால், விளையாட்டில் ஒலிம்பிக் அளவிற்கு சென்று நாட்டிற்கே பெருமை சேர்த்துத் தந்துள்ளனர் நம் பெண்கள். 2012 ஒலிம்பிக் போட்டிகள் பாட்மின்டன் போட்டியில் வெண்கலம் வென்று வரலாறு படைத்தார் செய்னா நேவால். அதற்கு அடுத்த ஒலிம்பிக்கில் அதாவது 2016 ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று இந்திய விளையாட்டை உலக அளவிற்கு கொண்டு சென்றவர்.  இவர்களை போன்ற பதக்க மங்கையரை பார்த்து உந்துதல் கொண்டு எத்தனையோ சின்னஞ் சிறிய பெண் குழந்தைகள் பயிற்சிக்கு செல்கின்றனர்.இப்படி எந்த துறையில் இருந்தாலும் அந்தத் துறையில் உச்சம் தொட முனைப்பு கொண்டு போராடி வருகின்றனர் நம் பெண்கள். அப்படி இருக்கையில், அவர்களுக்கு எதிரான குற்றங்களை குறைந்த பாடில்லை.  எண்பது வயது முதியவளும், 8 வயது ஆசிபாக்களும் இன்னமும் இங்கே சூறையாட பட்டுக்கொண்டு இருக்கின்றனர். பள்ளி, கல்லூரி,அலுவலகம், பூங்கா என எங்கு சென்றாலும் அவர்கள் ஒருவித பய உணர்வோடே சென்று வருகின்றனர். தனியாக செல்லுமிடத்தில் எதிரே ஆண் வந்தால் அவர்களுக்கு ஒருவித பய உணர்வு தொற்றிக் கொள்கிறது. இங்கே இந்த ஆணால் தமக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற மனநிலைக்கு பெண்கள் தள்ள படுகிறார்கள். பெற்ற மகளேயே வன்புணர்வு செய்யும் கொடுமைகள் இன்னும் இங்கே அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன என்பது அவலமான உண்மை. சக பெண்ணை பார்க்கும் போது, தங்கை,தாய் உணர்வு தோன்றும் காலம் எப்போது வரும். தானும்  ஒரு பெண்ணால் இந்த உலகிற்கு அறிமுகம் செய்யப் பட்டோம் என்பதனை எப்போது உணர்வர். தானாய் எல்லாம் மாறி விடும் என்று நம்பி இருப்பது முட்டால் தனம். சிறுவயது முதலே சிறுவர்களுக்கு ஆணும் பெண்ணும் சமம் என்பது போன்ற கருத்துக்களை ஊட்டி வளர்க்க வேண்டும். அதற்கடுத்து, திரை படங்களில் காட்டப்படும் பள்ளிப் பருவ, கல்லூரி பருவ காதல் காட்சிகளை அறவே ஒழிக்க வேண்டும். அந்த வயதில் வருவன யாவும் வெறும் இனக் கவர்ச்சியே என்பதனை புரிய வைத்தல் வேண்டும். இவ்வாறான கருத்துக்கள் அவர்கள் மனதில் ஆழ பதிந்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒரு போதும் நடக்கவே நடக்காது. "பெண்களை போற்றாத எந்த ஒரு தேசமும் உயராது". பத்தோடு பதினொன்றாக இதையும் ஒரு கட்டுரையாக படித்து விட்டு கடந்து விடாமல், நம்மால் முடிந்த மாற்றத்தை புகுத்த முயற்சிப்போம். ஆணாதிக்க சமூகம் இல்லாத, ஆணும் பெண்ணும் சரிக்கு சமமான உரிமை உள்ள நாடாக மாற்ற உழைத்திடுவோம். ஒவ்வொரு தினத்தையும் பெண்கள் தினமாக கொண்டாடிடுவோம்.

Sunday, December 9, 2018

"அழைக்கும் அலைகள்"

ஓ அலைகளே,
ஓயாத அலைகளே,
துளித் துளியாய்
மண்ணில் விழுந்தாலும்,
ஒன்றாய் சேர்ந்தால் தான்,
ஓயாமல் உழைத்தால் தான்
கரையை அடைய முடியும் என
மனிதனுக்கு உணர்த்த தான்
கரை வரை வந்து கைதட்டி
சொல்கிறாயோ...!

கவலைகளை மறக்க தான்,
அஸ்தியை கரைக்க தான்,
காதைலை வளர்க்க தான்,
கண்ணீரை துடைக்க தான்,
மகிழ்ச்சியை நிறைக்க தான்,
ஆயிரமாயிரம் கனவுகள்,
ஆயிரமாயிரம் மனிதர்கள்,
வருவோரை வாரி அணைத்து
அலை கொண்டும்,
வெண்மை நுரை கொண்டும்,
தாலாட்டும் தாயும் நீ தானா...!

ஆழி பேரலையாய்,
சீரிச் வந்து சினம் கொண்டு,
சுனாமி என்னும் பெரும் துயராய்
ஒரு நாழிகை நேரத்தில்
ஒரு கோடி உயிரை
பறித்துக் செல்வதும் நீயே,
பாய்மர படகினிலே
மீன் தேடி செல்லும்
கோடி மீனவனையும் வாழச்
செய்வதும் நீயே...!

இன்பமும் துன்பமும்
இணைந்தது தான் வாழ்வென்று
நொடிப்பொழுதும் உணர்த்திச்
செல்லத் தான் அலையாய் பிறந்து
நுறையாய் முடிகிறாயோ.



Wednesday, October 17, 2018

நவராத்திரி பண்டிகையும் அதன் சிறப்பம்சங்களும்

இதோ வந்து விட்டது அந்த பண்டிகை. தெருவெங்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. எங்கும் பூ மாலைகள் தோரணங்கள் தொங்க விடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தினம் மாலை அன்றும் கோயில்களில் பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த ஒன்பது நாட்களும் கடவுளுக்கே பண்டிகை தினம் தான். ஆம் சரிதான் நவராத்திரி பண்டிகை வந்துவிட்டது.பெண் தெய்வங்களில் மிகவும் சக்தியான தெய்வம் என்று கூறப்படும் துர்க்கை அம்மனை வழிபடும் விதமாக கொண்டாடப்படும் திருநாள் தான் இந்த நவராத்திரி பண்டிகை.இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயரால் கொண்டாடப்படும் இந்த விழாவைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் சிறிது இங்கே காண்போம்.

நவ என்றால் ஒன்பது 9 நாட்களில் 9 வடிவமாய் துர்க்கை அம்மன் அவதாரம் எடுத்ததால் இது நவராத்திரி எனப்படுகிறது.

வெவ்வேறு விதமாக கதைகள் கூறப்பட்டாலும். இந்த  பண்டிகை கொண்டாடப்படுவதின் சாராம்சம் ஒன்றுதான். தீமையை வெற்றி கொள்ளும் நன்மை. பல்வேறு கதைகள்  இருந்தாலும் இரண்டு கதைகள் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றன. முதல் கதையானது இலங்கையின் மன்னனான இராவணன் மான் வேஷம் கொண்டு சீதையைத் தன் வசப்படுத்தி இலங்கைக்கு கடத்திச் சென்றான். சீதையை மீட்பதற்காக இலங்கைக்கு சென்ற ராமன் அங்கு ராவணனோடு ஒன்பது ஒன்பது நாட்கள் போரிடுகிறான். பத்தாவது நாளில் இறுதிப்போரில் பத்து தலைகளைக் கொண்ட ராமனை தனது அம்பை கொண்டு அவனை வீழ்த்தினார். ஒன்பது நாட்கள் முடிந்து பத்தாவது நாளில் இந்த திருவிழா ராவணனின் சகோதரர்களாகிய மேகதாது மற்றும் கும்பகர்ணனை வீழ்த்தியதோடு முடிவடைகிறது.
இதன் இரண்டாவது கதை  துர்க்கை அம்மனை பற்றியது இந்த கதை பெரும்பாலும் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சொல்லப்படும் கதை ஆகும். அதாவது துர்க்கை அம்மன் மகிஷாசுரனுடன் போரிட்டு தர்மத்தை நிலைநாட்டிய நாளையே துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த கதையானது தேவி மகாத்மியம் என்னும் நூலில் உள்ளது.

நமது தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இது கொழு என்று அழைக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான வண்ண பொம்மைகளைக் கொண்டு நமது கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அலங்காரம் செய்து மேஜையில் அடுக்கி வைப்பது வழக்கம்.நவராத்திரி அன்று ஒவ்வொரு மாலையும் வீட்டில் அருகில் இருப்பவர்கள் வந்து கூட்டாக பஜனைகள் செய்வார்கள். வழிபாடு  செய்து முடித்தவுடன் அவர்கள் அனைவருக்கும் சுண்டல் முதலிய நவதானியங்களை ஒவ்வொரு நாளும் கொடுப்பது வழக்கம்.இந்த திருநாட்களில் கோயில்களில் பரத நாட்டியம் மோகினி ஆட்டம் முதலியன நடைபெறும்.

கர்நாடக மாநிலத்தில் முக்கியமாக மைசூர் அரண்மனையில் இவ் விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.இந்த விழாவினை காண உலகம் முழுவதில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருப்பர். தசரா பண்டிகையை ஒட்டி அரண்மனை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

மேலே குறிப்பிட்டது போல நவராத்திரி திருநாள் ஒவ்வொரு விதமாக ஒவ்வொரு மாநிலத்திலும் கொண்டாடப்படுகிறது பத்தாம் திருநாளில் கலைஞர்களால் ராமாயணம் நாடகம் நடத்தப்படுகிறது. பத்தாவது நாளில் ஆட்டம் பாட்டம் மகிழ்ச்சி என பத்தாவது நாள் சிறப்பாய் நிறைவடைகிறது.
அந்த ஒன்பது நாட்களும் துர்க்கையம்மன் எடுத்த அவதாரங்களுக்கும் ஒவ்வொரு கதை உண்டு.

முதல் நாள் சைல புத்ரி

முதல் நாள் பார்வதியின் அவதாரமாக துர்க்கையம்மன் பார்க்கப்படுகிறாள். இதில் பார்வதி சிவனின் வாகனமான நந்தியின் மேல் அமர்ந்து ஒரு கையில் திரிசூலமும், ஒரு கையில் தாமரையும் வைத்திருப்பதாய் புராணங்கள் சொல்கின்றன. இந்தச் விளக்குத் திரியை மகாகாளியின் நேரடி அவதாரமாகவும் பார்க்கின்றனர். இந்த நாளின் வண்ணம் சிவப்பு அதாவது செயலையும், கோபத்தையும் குறிப்பதால் இந்த நாள் அமைகிறது.

இரண்டாம் நாள் பிரம்மசாரிணி

இதிலும் துர்க்கை பார்வதியின் அவதாரம் எடுக்கிறாள். இதில் பார்வதி மனம் ஏதும் செய்யாமல் பிரம்மச்சாரியாக இருப்பதால் பிரம்மசாரிணி எனப் பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.இந்தத் திருநாளில் மோக்ஷம் கிடைக்கவும் அமைதியை நிலைநாட்டவும் வேண்டப்படுகிறது. இந்த அவதாரத்தில் அவள் வெறும் காலால் நடந்து, கைகளில் ஜப மாலையும், கமண்டலத்தையும் வைத்திருக்கிறாள். அது அமைதியையும் குறிப்பதாகும் இந்த நாளில் வண்ணம் மஞ்சள். அது அமைதியையும் சக்தியையும் கொடுக்கிறது.

மூன்றாம் நாள் சந்திரகாந்தா

இந்தத் திருநாளில் பார்வதி சிவனை மண முடிந்த திருக்கோலத்துடன் காட்சி அளிக்கிறார். அந்த கோலத்தில் பார்வதியின் முகம் நிலவை விடவும் அழகாக அழகாய் தோன்றியதால் இந்த நாளுக்கு சந்திரகாந்தா என்று பெயர் வந்தது. இது அழகையும் வீரத்தையும் குறிக்கிறது.

நான்காம் நாள் குஷ்முந்தா

இந்த அவதாரத்தில் பார்வதிதேவியை சதுர்த்தியன்று வழிபடுவர். இந்தக் கோலத்தில் இவ்வுலகையே படைத்தது மாபெரும் சக்தியாக அவளை பாவிக்கின்றனர் . இந்த அவதாரத்தில் பார்வதி எட்டு கைகளோடு புலியின் மீது அமர்ந்து பவனி வருகிறாள் இந்த நாளில் வண்ணம் பச்சை.

ஐந்தாம் நாள் ஸ்கந்த மாதா

இந்த நாளில் பார்வதிதேவியை பஞ்சமி தினத்தில் வழிபடுவர்.  இந்த நாளில் தாயாக காட்சி தருவாள்.இந்த நாளின் மகிமையானது தான் பெற்ற பிள்ளை ஏதாவது ஒரு ஆபத்திலிருந்து பெற்ற தாயை எப்படி உருமாறுவதை வெளிக்கொணரும் இதமாய் அமைந்துள்ளது.கோபம் கொண்ட ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்து நான்கு கைகளுடன் ஒரு கையில் குழந்தையை வைத்திருப்பதாய் இந்த நாளில் காட்சி தருவாள்.

ஆறாம் நாள் காத்தியாயினி

துர்க்கையின் அவதாரமாய் கார்த்திகாவை இந்த பூமியில் அவதரித்த நாள் இந்த நாள் ஆகும். இந்த கார்த்தி யாவை போரின் கடவுள் என்று அழைக்கின்றனர். துர்க்கையம்மன் எடுத்த அவதாரங்களில் இது மிகவும் உக்கிரமான அவதாரம் என்று புராணங்கள் கூறுகின்றன. நான்கு கைகளில் போர் ஆயுதங்களுடன் சிங்கத்தின் மீது வலம் வருபவர் அன்றைய தினம் காட்சி தருகிறார்.

ஏழாம் நாள் கல் ரத்ரி

சப்தமி திருநாளில் வழிபடும் தெய்வம் இந்த கல் ரத்ரி. இந்த அவதாரமும் உக்கிரமான அவதாரமாக பார்க்கப்படுகிறது.இந்த அவதாரத்தில் தனது அழகான தோற்றத்தை விடுத்து சும்ப நிசும்ப என்ற அரக்கர்களை கொன்று அவதாரம் இது. இந்த நாளில் நிறம் வெண்மை. இந்த நாளில்தான் துர்க்கையின் நிறம் கருப்பாக மாறியது.

எட்டாம் நாள் மஹா கௌரி

இந்தத் திருநாள் ஆனது அறிவுக் கூர்மைக்கும் அமைதிக்கும் உரித்தான நாளாக பார்க்கப்படுகிறது. சிவனைக் காண பல்வேறு காடுகளையும் கடந்து சிரமப்பட்டு கைலாயத்தை அடைந்த துர்க்கை அம்மனை சிவன் கங்கையின் நீர் கொண்டு அபிஷேகம் செய்தால் இந்தப் பெயர் பெற்றாள்.

ஒன்பதாவது நாள் சித்திதாத்ரி

ஒன்பது மற்றும் நிறைவான நாள் நவமி ஆகும். இந்தத் திருநாளில் துர்க்கை அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் பூணுகிறாள்.தாமரை மலர் மீது அமர்ந்து காட்சி தரும் துர்க்கை எட்டு சித்திகளையும் தன்னுள் மடக்கியவாறு காட்சி தருகிறாள்.

"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...