வருக! வருக!
உகானில் தொடங்கி
எம்மவர் மோடி போல்
உலகம் சுற்றிப் பார்க்க
உற்சாகமாய் வரும்
அன்புக் கொரோனா - வே
வலது கால் வைத்து
வந்துவிடு நாட்டிற்குள்...
வந்தாரை வரவேற்று
விருந்தோம்பல் புரிவதில்
எம்தமிழ் குடிகளுக்கு யாரும்
நிகருன்டோ இவ்வுலகில் - இக்
கவிதனை காண்கின்ற
கண்கள் யாதொன்றும்
ஆச்சரியத்தால் விரிவதில்
ஆச்சரியமில்லை எமக்கு.
உலகமே உன்னை
"தூற்றிக்" கொண்டிருக்க,
இருகரம் கூப்பி நின்புகழை
"போற்றிக்" துதிபாடி
வரவேற்பது நானே நானாக
மட்டும்தான் இருக்கும்.
அறிவியலை கேட்டால்
உன்னை "கிருமி" என்னும்.
அழகனை கேட்டால்
உன்னை "கருமி" என்பேன்.
ஆம், பைசா செலவில்லாமல்
பழக்க வழக்கம்
பலவற்றை பக்குவமாய்
சொல்லித் தருகின்றாயே...
ஐந்து அங்குல
இடைவெளியில் அடுக்கடுக்காய்
தொங்கும் கைப்பிடியை,
கைப்பிடிக்க கைகள் பத்து
போட்டி போட,
தன் மூச்சு காற்றை
தானே சுவாசிக்கும், - இந்த
கான்கிரீட் காடுகள் வாழ்,
கார்ப்பரேட் பிரஜைகள்
யாவும் தினம்தினம்
ரயிலில் பயணிக்க,
யாருக்கும் சொல்லாமல்,
உன்னைப்போலவே
அனுதினமும் அனைவருக்கும்
வந்துவிடும் தும்மல் தனை,
எதிர்,புறம், மேல், கீழ்
சுற்றம் முற்றம் என
என எத்திசையும் பாராமல்
எச்சிலை அள்ளித்
தும்மித் தொலைக்கும்
அறிவிலி ஜீவன்களுக்கு
கைக்குட்டை பயன்படுத்த
அழகாய் சொல்லித்தந்தாய்...
தலைசாயும் செங்கதிரை
தலையோடு கோதுவதாய்
தினந்தோறும் தான் எண்ணி
போகையிலும் வருகையிலும்
கிருமிகள் யாவும்
சகல சௌபாக்யத்தோடு
குடித்தனம் நடத்தும்
சுற்றுச் சுவற்றை எல்லாம்
அனுபவித்து தடவி வந்து,
கை ஏதும் கழுவாமல்
நாயர் கடைதன்னில்
நாள்பட்ட எண்ணெயில்
தற்கொலை செய்துகொண்ட
பஜ்ஜியை எடுத்து தின்னும்
அருஞ் சுவை மன்னர்களை
சோப்புத் தண்ணீரில்
கைகழுவ செய்தாய்....!
திறந்து வைத்த நாள் முதல்
தண்ணீரை கூட
கண்டிராமல் காய்ந்திருக்கும்
அரசு மருத்துவமனைகளின்
தரைகளை யாவும்
கிருமி நாசினி கொண்டு
கழுவச் செய்து,
உன் சொந்த பந்தங்களான
ஏனைய வைரஸ்களை
பூவுலகம் அனுப்பி வைத்தாய்...!
காலச்சக்கரத்தின்,
ஆயுள் கைதிகளாய்,
அடைபட்டு கிடந்த
மண்ணுலக மனிதர்களுக்கு
21 நாட்கள் பெயில்
கொடுக்கச் செய்து
ஞாயிற்றின் காலையும்
திங்களின் காலையும்
வேறுவேறு அல்லவென
உணர்த்திச் சென்றாய்...
வஞ்சம் சூழ்ச்சி,
பொறாமை பொய்
போட்டி பேராசை
சண்டை சச்சரவு
சபலம் சுயநலம்
மதம் சாதி
குலம் கோத்திரம்
உயர்ச்சி தாழ்ச்சி வென
ஆயிரம் கொரோனாக்களை
தன்னகத்தே கொண்டுள்ள
அற்ப மனிதனுக்கு
"மனிதத்தின்" மகத்துவத்தை
அழகாய் புரியவைத்தாய்...!
ஒழுக்கத்தின் விழுப்பம் தனை
ஒழுங்காய் கற்றிடாமல்
வள்ளுவனின் வாக்குதனை
வகுப்போடு மறந்துவிட்டு
வாட்ஸ் அப்பிலும் பேஸ்புக் கிலும்
வந்திந்திகளை பரப்பி வருகிறோம்
வீழாமல் என்றென்றும்
விழிப்புற மாட்டோம் என
கங்கணம் கட்டிக்கொண்ட
மானுட மாக்களுக்கு
நல்லுரை வழங்கிட
வைரசாக வந்தவும்மை
வணங்காமல் இருந்திடுவோமா
இல்லை மறந்து தான்
கடந்திடுவோமா..?
கவிஞன் எப்போதும் உலக நிகழ்ச்சிகளை மாறுபட்ட கோணத்திலேயே அணுகுகிறான் என்பதற்கு இக்கவி ஒரு எ.கா ஆகும். இயற்கையின் இன்னல் அகற்ற வந்தான் அவன் நண்பன் கொரேனா.
ReplyDeleteஅது என்னமோ சகா... கொரோனா வந்த நாள் முதல், அது மக்களை திருத்த வந்ததாகவே எண்ணுகிறேன்.
ReplyDeleteதிருந்து அல்லது திருத்தப்படுவாய் என்பது இயற்கை விடுக்கும் எச்சரிக்கை சகோ.
Delete200% உண்மை
ReplyDeleteகொரோனாவின் மறுபக்கம்😀👏👏
ReplyDelete