"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்,
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்,
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!"
நிமிர்ந்த பார்வையும் நேர் கொண்ட நடையும் வேண்டும், என்ற புரட்சிக் கவிஞன் பாரதியின் வரிகள் இவை. பாரதியாரின் இவ்வரிகள் உண்மையாகவே நிகழ்த்த பட்டிருக்கின்றதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.பெண் சுதந்திரம் என்று எல்லோருமே பதிவிட்டாலும், பேசினாலும் அதை நடைமுறையில் இன்னும் முழுமையாக பெண்களுக்கு கிடைக்கவில்லை என்பதே வருந்தத்தக்க உண்மை. ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் மகளிர் தினத்தன்று அனைவரும் தங்களுடைய தாய்,தோழி,தமக்கை மற்றும் உறவு பெண்மணிகளின் படங்களை பதிவிட்டு மகளிர் தின வாழ்த்துக்களை கூறுகிறோமே தவிர உண்மையில் அவர்களுக்கான சுதந்திரத்தையும் அவர்களுக்கான தனித்துவமான இடத்தையும் விட்டுக் கொடுத்தோமா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏன் வந்தது இந்த பெண்கள் தின கொண்டாட்டம், ஒவ்வொரு தினமும் பெண்கள் தினமாய் ஆகிட என்ன செய்திட வேண்டும் என்பதனை இங்கே காண்போம்.
பெண்கள் தின வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும் என்றால் நாம் நூறு ஆண்டுகளுக்கு முன் செல்ல வேண்டும்.
• 1850 களில் அமெரிக்க மாகாணத்தில் துணிகள் உற்பத்தி செய்யும் தொழிலே பெரும்பான்மையான மக்களால் செய்யப்பட்டது. ஆனால் அவ்வாறான வேளைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உணவு,சம்பளம், வேலை நேரம் போன்றவற்றில் பெரிதும் பாகுபாடு காட்டப்பட்டது.ஆண்கள் எட்டு மணி நேரம் வேலை செய்தனர் என்றால் பெண்கள் 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வேலை செய்ய நிர்பந்திக்க பட்டனர்.மேலும் வேலைக்கேற்ற ஊதியமும் அவர்களுக்கு நிராகரிக்க பட்டது. தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக பெண்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இது பெண்கள் தங்கள் சுதந்திரத்தை காக்க எடுத்த வைத்த முதல் அடி எனலாம்.
• அதன் பிறகு, தெரசா மாலிகெல் என்பவரின் ஆலோசனைப்படி
பெண்கள் தினம் முதன் முதலில் 1909 ஆம் ஆண்டு அமெரிக்காவில் "தேசிய பெண்கள் தினமாக" அமெரிக்க பொதுவுடமை கட்சியால் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு உலகம் முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
• 1910 இல் டென்மார்க் நகரில் "சர்வதேச பொதுவுடமை பெண்கள் மாநாடு" நடைபெற்றது. 17 நாடுகளை சேர்ந்த 100 பெண்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
• அதற்கு அடுத்த வருடம், அதாவது 1911 இல் ஆஸ்திரியா,டென்மார்க், ஜெர்மனி போன்ற நாடுகளில் லட்ச கணக்கான பெண்களால் ஒன்றாக இணைந்து பெரு விமர்சையாக கொண்டாட பட்டது.
• 1975 இல் ஐக்கிய நாடுகள் சபையில் பெண்கள் தினம் முதல் முறையாக கொண்டாடப்பட்டது.
• 1977 இல் ஐக்கிய நாடுகள் சபையில் பெண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் எட்டாம் தேதி கொண்டாட படும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.
• அதன் பின் 1996 முதல் ஒவ்வொரு வருட பெண்கள் தினமும் ஒவ்வொரு கருத்தை மையமாக கொண்டு கொண்டாட பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பெண்கள் தினம் " ஊரக மற்றும் நகர்புற பெண்களின் வாழ்வியலை மாற்ற இதுவே நேரம்" என்னும் கருத்தியலை கொண்டு கொண்டாட பட்டது. இந்த ஆண்டிற்கான கருத்தாக "சமாமாக நினைத்திடு, புத்திசாலியாக வளர்ந்திடு, மாற்றத்திற்கு முனைந்திடு" என்னும் கருத்தியலை கொண்டு கொண்டாட பட உள்ளது.
"மாற்றம் என்பது சொல் அல்ல செயல்"
வெறும் மாற்றம் மாற்றம் என்றால் அது என்பது எந்நாளும் வராது. ஒரு கனவாகவே கடந்து விடும். நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த பெண்கள் வாழ்விற்கும், இப்போது பெண்கள் வாழும் வாழ்க்கை முறைக்கும் அளப்பரிய வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதனை யாரும் மறுத்து கூற முடியாது. ஆனாலும் பெண்கள் விரும்பும் வாழ்க்கை அவர்களுக்கு கொடுக்கப்படுவது இல்லை. எத்தனையோ ஆண்டுகள் போராட்டதிற்கு பின்பு பெண்கள் அடுக்களையில் இருந்து தங்களுக்கான விடுதலையை பெற்று விட்டனர். இந்தக் கால கட்டத்தில் பெண்கள் நுழையாத துறையே இல்லை எனலாம். ஆட்டோ ஓட்டுனர் முதல் விமானம் ஒட்டும் வரை, தொழில் நிர்வாகம் முதல் ஒவ்வொரு துறையிலும் கால் பதித்ததோடு மட்டும் அல்லாமல், தத்தம் துறையில் மிகப்பெரிய வெற்றியும் பெற்று சாதித்து காட்டி உள்ளனர். "அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு" என ஏளனப் பேச்சு பேசியோர் மத்தியில், நம்மாலும் சாதிக்க முடியும் என்ற வெற்றி வேட்கை கொண்டு போராடி அதில் வெற்றியும் கண்டுள்ளனர் நம் பெண்டிர். உதாரணமாக இந்தியாவின் முன்னணி குளிர்பான நிறுவனம் பெப்சி. இந்த நிறுவனத்தின் உயரிய பொறுப்பான தலைமை நிர்வாக அலுவலராக பணியாற்றி பெருமை சேர்த்தார் இந்திரா நூயி என்னும் பெண்மணி. அதே போல் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் உயரிய பொறுப்பில் இருந்து தங்களுக்கான ஆளுமையை நிரூபித்து காட்டினர். நிர்வாக துறை ஒரு புறம் என்றால், விளையாட்டில் ஒலிம்பிக் அளவிற்கு சென்று நாட்டிற்கே பெருமை சேர்த்துத் தந்துள்ளனர் நம் பெண்கள். 2012 ஒலிம்பிக் போட்டிகள் பாட்மின்டன் போட்டியில் வெண்கலம் வென்று வரலாறு படைத்தார் செய்னா நேவால். அதற்கு அடுத்த ஒலிம்பிக்கில் அதாவது 2016 ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று இந்திய விளையாட்டை உலக அளவிற்கு கொண்டு சென்றவர். இவர்களை போன்ற பதக்க மங்கையரை பார்த்து உந்துதல் கொண்டு எத்தனையோ சின்னஞ் சிறிய பெண் குழந்தைகள் பயிற்சிக்கு செல்கின்றனர்.இப்படி எந்த துறையில் இருந்தாலும் அந்தத் துறையில் உச்சம் தொட முனைப்பு கொண்டு போராடி வருகின்றனர் நம் பெண்கள். அப்படி இருக்கையில், அவர்களுக்கு எதிரான குற்றங்களை குறைந்த பாடில்லை. எண்பது வயது முதியவளும், 8 வயது ஆசிபாக்களும் இன்னமும் இங்கே சூறையாட பட்டுக்கொண்டு இருக்கின்றனர். பள்ளி, கல்லூரி,அலுவலகம், பூங்கா என எங்கு சென்றாலும் அவர்கள் ஒருவித பய உணர்வோடே சென்று வருகின்றனர். தனியாக செல்லுமிடத்தில் எதிரே ஆண் வந்தால் அவர்களுக்கு ஒருவித பய உணர்வு தொற்றிக் கொள்கிறது. இங்கே இந்த ஆணால் தமக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற மனநிலைக்கு பெண்கள் தள்ள படுகிறார்கள். பெற்ற மகளேயே வன்புணர்வு செய்யும் கொடுமைகள் இன்னும் இங்கே அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன என்பது அவலமான உண்மை. சக பெண்ணை பார்க்கும் போது, தங்கை,தாய் உணர்வு தோன்றும் காலம் எப்போது வரும். தானும் ஒரு பெண்ணால் இந்த உலகிற்கு அறிமுகம் செய்யப் பட்டோம் என்பதனை எப்போது உணர்வர். தானாய் எல்லாம் மாறி விடும் என்று நம்பி இருப்பது முட்டால் தனம். சிறுவயது முதலே சிறுவர்களுக்கு ஆணும் பெண்ணும் சமம் என்பது போன்ற கருத்துக்களை ஊட்டி வளர்க்க வேண்டும். அதற்கடுத்து, திரை படங்களில் காட்டப்படும் பள்ளிப் பருவ, கல்லூரி பருவ காதல் காட்சிகளை அறவே ஒழிக்க வேண்டும். அந்த வயதில் வருவன யாவும் வெறும் இனக் கவர்ச்சியே என்பதனை புரிய வைத்தல் வேண்டும். இவ்வாறான கருத்துக்கள் அவர்கள் மனதில் ஆழ பதிந்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒரு போதும் நடக்கவே நடக்காது. "பெண்களை போற்றாத எந்த ஒரு தேசமும் உயராது". பத்தோடு பதினொன்றாக இதையும் ஒரு கட்டுரையாக படித்து விட்டு கடந்து விடாமல், நம்மால் முடிந்த மாற்றத்தை புகுத்த முயற்சிப்போம். ஆணாதிக்க சமூகம் இல்லாத, ஆணும் பெண்ணும் சரிக்கு சமமான உரிமை உள்ள நாடாக மாற்ற உழைத்திடுவோம். ஒவ்வொரு தினத்தையும் பெண்கள் தினமாக கொண்டாடிடுவோம்.