'அ' வென்றும் 'ஆ' வென்றும்
சிலேட்டில் எழுதி, சொல்லி
வந்த எமக்கு பத்தாம் வகுப்பு
வந்த பின்பு தான்
'அகரம்' என்றும் 'ஆகாரம்' என்றும்
சொல்லப் பழகித் தந்தாய்...!
ஆண் உயர்வா இல்லை
பெண் உயார்வா என்று
அறியா வயதில் புரியா
சண்டை செய்த எமக்கு
ஆணும் பெண்ணும்
சமம் என்று அறிவுரை செய்தாய்..!
அர்த்தம் புரியாமல்
மேல் கணக்கும், கீழ் கணக்கும்
மனப்பாடம் செய்த எமக்கு
சுதி, தாளம், இராகம் சேர்த்து
பாடலாக வடித்துத் தந்தாய்.
வகுப்பறைகள் தோறும்
பேசுவோரே கண்காணிக்க
இருவர் இருந்த நிலையில்
ஒழுக்கத்தின் மேன்மை
சொல்லி 'லீடர்' இல்லா
வகுப்பறையாக மாற்றி
புது புரட்சி செய்தாய்...!
கோனார் உரையில்
வினா விடை மட்டுமே
படித்து மதிப்பெண்
பெற தெரிந்த எமக்கு
நாபிறழ் பயிற்சியும்,
பொது அறிவு பக்கத்தையும்
படிக்கச் செய்தாய்...!
முதன் வகுப்பே
உன் வகுப்பாய்
தான் இருக்க,
பல சிந்தனையில்
பள்ளி வரும் எமக்கு
உன் நகைச்சுவையால்
செல்லக் கடி கடித்து
அத்தனையும் மறக்கச் செய்தாய்...!
'சார்' என்றும் 'மேடம்' என்றும்
ஆங்கிலத்தில் அழைத்தே
பழகிய எம் நாவிற்கு
'ஐயா' என்று அழகிய
தமிழில் அழைக்க
பழக்கம் செய்தாய்...!
டியூஷன் வகுப்பில்
ஒன்று, கதை பேசி
கழித்திருபோம் அல்லது
வீட்டுப் பாடம் எழுதி
முடித்திருப்போம் ஆனால்,
நீ வந்தே பின்னே
கவிதையும், பாட்டும் பாடசொல்லி
எங்கள் தனித்திறமை
யாவென எங்களை
அறியச் செய்தாய்...!
தூரத்தில் ஆசிரியர்
சென்றாலே ஒளிந்து
கொண்ட நாட்களை,
விடுமுறையில் கண்டாலும்
எதிர் சென்று வணக்கம்
செய்யும் நாட்களாய்
மாற்றிய "ஆசு அரியரும்"
நீ தானே...!
பிள்ளைகளுக்குள் பேதமின்றி
பொதுவாக நடத்தும் தாய்போல,
மாணவர்களுக்கு பேதமின்றி
அனைவரையும் ஒன்றுபோல,
அன்புவழி காட்டி
தோளில் கைபோட்டு
அரவணைத்துக் கொண்ட
அன்பாசிரியர் நீ தானே...!
கற்றவையும் கற்பவையும்
மட்டுமே சொல்லித் தர
இங்கே ஆயிரமாயிரம்
ஆசிரியர் இருக்க
"நிற்க அதற்கு தக"
என சொல்லிய ஆசிரியர்
நீ மட்டுமே என
என்றும் பெருமை
கொள்வோம் நாங்கள்...!
(எந்தன் தமிழுக்கு விதை இட்டவர். ஆசிரியர் என்னும் புனித உறவை தாண்டி எங்களிடம் அன்பு காட்டிய ஆசான் திரு. பிரபு அவர்களின் பிறந்த நாளில் இந்த மாணவனின் சிறு கவி - தட்சணை)
நல்விதை விதைத்த அவர் நல்லாசிரியர் தானே.
ReplyDelete👏👏👏👌👌👌
ReplyDeleteWowww....prideful Movement Prabu Sir ...soo Nice...The Awesome poet creates a New Author Now. Beautiful poem.
ReplyDeleteநன்றி முத்து.🙏.
ReplyDelete